பதிவு செய்த நாள்
09
அக்
2018
02:10
தாராபுரம்: மஹாளய அமாவாசையை ஒட்டி, தாராபுரம், அமராவதி ஆற்றில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை, மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம், மக்கள் தங்களது முன்னோர்களை வழிபட உகந்த நாளாக கருதுகின்றனர். மஹாளய அமாவாசையையொட்டி, தாராபுரம் பைவ்கார்னர் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில், மக்கள் நேற்று (அக்., 8ல்) காலை முதலே குவிந்தனர். ஆற்றில் நீராடிய மக்கள், கரையில் அமர்ந்து தங்களது, முன்னோர்களுக்காக, ஹோமங்கள் மற்றும் தர்ப்பண பூஜைகளை செய்தனர். பித்ருக்களுக்கான பிண்டங்களை வைத்து, எள் மற்றும் நீரை ஊற்றிய பின் ஆற்றில் பிண்டங்களை கரைத்து தர்ப்பணம் செய்தனர்.
பின் சூரியனை வணங்கி தர்ப்பணத்தை நிறைவு செய்தனர்.
* மஹாளய அமாவாசையையொட்டி தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம், தில்லாபுரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரின் பல கோவில்களில் நேற்று (அக்.,8ல்) காலை நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
* மஹாளய அமாவாசையான நேற்று (அக்.,8ல்), ஈரோடு கருங்கல்பாளையம் காவிரியாற்று கரையில், முன்னோர் வழிபாடு நடத்த அதிகாலை முதலே, மக்கள் குவிந்தனர். எள், பிண்டம் வைத்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கூட்டம் அதிகமிருந்ததால், காவிரியாற்றின் கரையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
* மஹாயள அமாவாசையான நேற்று அந்தியூர், தவிட்டுப் பாளையம், சின்னதம்பிபாளையம், புதுப்பாளையம்,வெள்ளித் திருப்பூர், அத்தாணி, கீழ்வாணி மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில்களில், நேற்று (அக்., 8ல்) , ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.