பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
புதுச்சேரி:சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வரலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக, புதுச்சேரி இந்து அன்னையர் முன்னணி சங்கத்தினர் விளக்கேற்றி பிரார்த் தனையில் ஈடுபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வரலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு, ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி கோவிந்த சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், புதுச்சேரி இந்து அன்னையர் முன்னணி சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், சபரிமலைக்கு குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விளக்கு ஏந்தி, கோவிலை வலம் வந்து பிராத்தனையில் ஈடுபட்டனர்.அப்போது, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வரலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் குமரகுரு கூறுகையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது.
எனவே, வரும் 13ம் தேதி, புதுச்சேரி சுதேசி மில் அருகே, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக தொடர் பிரார்த்தனை நடக்கிறது. இதில், அய்யப்ப பக்தர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றார். அகில இந்திய ஐயப்ப சேவா சங்க செயலாளர் செல்வம், இந்து முன்னணி நிர்வாகி சனில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.