பிராணன் செயல்படப் பிராண வாயு துணை செய்கிறதென முன்பார்த்தோம். மனித உயிர்கள் அவ்வாயுவினை பிரபஞ்சத்திலிருந்தே காஸ்மிக் பெறுவதால் பிரபஞ்சத்திற்கு நாம் கட்டுப்பட்டவர்களாகிறோம். அதே போல் அப்பிரபஞ்சத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியும் என்கிறது யோகக்கலை. மூச்சு விடுவதற்கும், மூச்சினை உள்ளிழுக்கவும் பிராணனே அடிப்படையாய் இருப்பதால், மூச்சுவிடுதல் சுவாச மாற்றங்களை பலப்பல கணக்குகளின்படி நெறிப்படுத்துதலும், கட்டுப் படுத்தலுமே பிராணாயாமம் எனப்படும். மனிதன் குண இயல்புகளும் கூட மூச்சை நெறிப்படுத்துதல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை யோகிகள் கண்டறிந்து சொன்னவைகளை யோக மதம் அல்லது யோக வேதம் என்று கூறுவர். கோபம், துக்கம், மகிழ்வு, போன்ற எண்ண வேறுபாடுகளின்போது மூச்சு மாறுகிறது. இயல்பான மூச்சினின்றும் வித்தியாசப்படுகிறது என்பதைக் கண்டு, அதே முறையில் மூச்சை சுவாசத்தை மாற்றி எண்ணங்களைச் சமனப்படுத்தவும் கூடும்.
மனமகிழ்வு, நிம்மதி போன்ற மன ஆரோக்கியத்தை மன ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் பல்வகையான பிராணாயாம முறைகளை யோகம் கூறுகிறது. யோக மார்க்கம் என்ற யோக வழியின் தந்தை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமே உலகிற் சிறந்த யோக சாஸ்திரமாக விளங்குகிறது. மனிதச் செயல்பாடுகளால் மாண்புபெறும் வழிகளை நான்கு நிலைகளில் எய்தலாம் எனப் பெரியோர் கூறுவர்.
1. சரியை 2. கிரியை 3. ஞானம் 4. யோகம். இவ்வழிகளில் மிகச்சிறந்ததாக ""யோகமே குறிப்பிடப்படுகிறது.
1. சரியை - வயது வரும்போது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதி பெறுகிறான். அவ்விதமே அவன் தனக்காகச் செய்யும் காரியங்கள் ""சரியை எனப்படுகிறது.
2. கிரியை - தனக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் பயன்படத்தக்க வகையில் வினையாற்றுவதே ""கிரியையாகிறது.
3. ஞானம் - நற்கிரியைகளைச் செய்து நற்பேறு பெற்றிடும் நடுநிலையாள்கிறவர்கள் ""ஞானம் எய்துகின்றார்கள்.
4. யோகம் - இதற்கும் மேலாகத் தன்னையும் தன் பிறவியையும் நன்குணர்ந்திடவும், இறைவனோடு தன்னை இணைத்துக் கொள்ளும் மேன்மைப்படுத்திய உணர்வு ஆற்றலை, மன ஆற்றலை வளர்த்து வினையாற்றுவது யோகமாகிறது. இந்த யோக நெறியின் முதல்படியே பிரணாயாமமாகும் பிராண வேள்வி.