பதிவு செய்த நாள்
13
அக்
2018
11:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில், சதயவிழாவின் போது, திருமுறை திருவீதியுலாவிற் காக, செயற்கை நாரிழையால் ஆன, பெரியகோவில் வடிவ ரதம் உபயமாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய, ராஜராஜ சோழன் பிறந்த தினம், சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, சதயவிழா வரும், 19 மற்றும் 20ம் தேதி நடக்கிறது.சதயவிழாவின் இரண்டாம் நாள் காலையில், ஓதுவார்களின் திருமுறை பண், மங்கல இசையுடன், ராஜ வீதிகளில் திருமுறை திருவீதியுலா நடக்கும்.
அப்போது, ஓதுவார்கள் பெரிய கோவில் வடிவிலான ரதத்தில் ஊர்வலமாக செல்வர்.இதற்கான ரதம், சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை அறிந்த, தஞ்சாவூர், வல்லத்தைச் சேர்ந்த பக்தர் ராமலிங்கம், சதயவிழாவிற்காக செயற்கை நாரிழையில், 18 அடி நீளமும், 12 அடி அகலமும் உடைய புதிய ரதத்தை செய்து, உபயமாக நேற்று (அக்.,12ல்) வழங்கினார். இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.
இவர், சினிமாவில் இணை செட் வடிவமைப்பாளராக, 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளர். 2010ல் பெரியகோவிலின், 1,000 ஆண்டு விழாவில், கருத்தரங்க மேடையை, பெரியகோவில் வடிவில் உருவாக்கியவர்.