பதிவு செய்த நாள்
13
அக்
2018
11:10
சத்தியமங்கலம்: ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவிலில், பிறந்த பெண் குழந்தை முதல், வயதான பெண்கள் வரை, அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு, நுாற்றாண்டு காலமாக வழிபாடு நடக்கிறது.தமிழகம் - கர்நாடகா, மாநில எல்லையான, ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்து, கொங்கஹள்ளி வனம் உள்ளது. இங்கு, மூன்று மலைகளுக்கு நடுவில், பாறை குகையில், மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான கோவிலில், பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளது. பல நுாறு ஆண்டுகளாக, லிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபடுகின்றனர். இங்கு, 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில், ஆண்டுதோறும் குண்டம் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம். இதனால், பெண்கள் அனைவரும், கோவிலிலிருந்து, 2 கி.மீ.,க்கு அப்பால் நின்று விடுவர்.குண்டம் விழாவிலும் ஒரு சிறப்புண்டு. அதாவது தீ வார்க்கப்பட்டு, குண்டத்தில் மலர்கள் துாவப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ்ந்து ஆரவாரம் செய்ய, பூசாரி மட்டுமே இறங்குவார். இதிலும், பூசாரியை தவிர, பக்தர்கள் தீ மிதிக்கக் கூடாது என்பது, ஐதீகமாக உள்ளது. இதனால், குண்டத்தை ஆண்கள் தொட்டு வணங்கி செல்வர்.சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட, வயதான பெண்கள் வழிபட அனுமதியுண்டு. ஆனால், இங்கு, பெண் குழந்தை முதல், வயதான பெண்கள் வரை, யாருமே செல்லக்கூடாது.