பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
சேலம் : சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், தை கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, 108 வீணை வழிபாடு நடக்கிறது. புராண கால சிறப்பு மிக்க சேலம் சுகவனேஸ்வரர் கோவில், 1,200 ஆண்டு பழைமை வாய்ந்தது. சுகபிரம்ம ரிஷயால் வணங்கப்பட்ட சுகவனேஸ்வரர் கோவிலில், சொர்ணாம்பிகை அம்மனுக்கு மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. பழநி மலையில் இருந்த போகர் சித்தரின் குருநாதர் காளங்கி சித்தருக்கு, இந்த அம்மன் வழிகாட்டியதாக போற்றப்படுகிறார். சுகவனேஸ்வரர் கோவிலில், வரும் 10ம் தேதி மாலை 3.30 மணிக்கு, தை கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, மூலவருக்கும், உற்சவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தை கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, சேலத்தில் முதல் முறையாக தேவ வாத்தியமான வீணையை, 108 பெண்கள் மீட்டி அம்மனை வழிபடுகின்றனர். இந்நிகழ்ச்சியை, கோவில் வளாகத்தில் உள்ள அனைவரும் கண்டு மகிழும் வகையில், திரை மூலம் ஒளிபரப்பபு செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு, அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமிக்கு வெள்ளிக்கவசங்கள் சாத்துப்படி நிகழ்ச்சி நடக்கிறது. கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், 80 வயது கடந்த முதியவர்கள் விழாவில் தரிசனத்துக்கு, தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ளும், 10 ஆயிரம் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.