பதிவு செய்த நாள்
08
பிப்
2012
11:02
ஆந்திராவில், ஒரு கோடி பேருக்கு மேல் பங்கேற்கும், "சம்மக்கா, சாரக்கா காட்டு திருவிழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தெலுங்கானா பிரச்னைக்கு தூபம் போட்ட திருவிழா, மீண்டும் துவங்குவதால், அடங்கிக் கிடக்கும் பிரச்னை விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 10 மாவட்டங்களைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும், இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி, 2009ம் ஆண்டின் இறுதியில் போராட்டம் துவங்கியது. போராட்ட களத்திற்கு தூபம் போடும் வகையில், 2010ம் ஆண்டு பிப்ரவரியில், ஆந்திராவில் நடந்த காட்டுத் திருவிழா அமைந்தது. இதையடுத்து தீக்குளிப்பு, பஸ் எரிப்பு, கடையடைப்பு என போராட்டம் தீவிரம் அடைந்தது. தெலுங்கானா பகுதிக்குட்பட்ட வாராங்கல் மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ., தொலைவில், மேடாரம் என்ற அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது.
ஆந்திரா -சத்திஸ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ள இப்பகுதி, எடூர் நகரம் வனவிலங்கு காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், சத்திஸ்கர், ஆந்திராவை சேர்ந்த நக்சலைட்களும் இப்பகுதியில் தான் முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தான், "சம்மக்கா, சாரக்கா ஜாத்ரா என்ற பெயரில், பழங்குடியின பெண்களை வன தெய்வங்களாகக் கருதி, காட்டுத் திருவிழா நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில், தெலுங்கானா மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேர் வரை பங்கேற்பார்கள். நக்சல் மற்றும் விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இந்த திருவிழாவிற்குப் பிறகு, அங்கு செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. அதனால், தரிசனத்திற்காக மட்டுமின்றி, இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், தெலுங்கானா மக்கள் மட்டுமின்றி கர்நாடகா, சத்திஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இதில் பங்கேற்று வருகின்றனர். திருவிழாவின் போது, கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில், எடைக்கு எடை வெல்லத்தை காணிக்கையாக வீசினால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். கடந்த ஆண்டு, தெலுங்கானா வேண்டி ஏராளமானவர்களும், ஒருங்கிணைந்த ஆந்திரா வேண்டி ஏராளமானவர்களும் வெல்லத்தை வீசி வழிபாடு செய்தனர். ஒரு கோடி பேர் இணையும், 1,000 ஆண்டுகள் பழமையான திருவிழா என்பதால், ஓட்டு அரசியலுக்காகவும், வேண்டுதலுக்காகவும், ஆந்திர மாநில அரசியல்வாதிகள் இந்த திருவிழாவில் கட்டாயம் பங்கேற்பார்கள். கடந்த திருவிழாவின் போது, தெலுங்கானா பிரச்னை தீவிரமாக இருந்ததால், எதிர்ப்பு காரணமாக ஒருங்கிணைந்த ஆந்திரா கோரும் அரசியல்வாதிகள், இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அப்போது முதல்வராக இருந்த ரோசய்யா மட்டும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவிழாவில் பங்கேற்று, வெல்லம் வீசி வழிபாடு நடத்திச் சென்றார். தற்போது தமிழக கவர்னராக உள்ள அவர், இந்தாண்டு திருவிழாவில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அவரைப் போலவே, ஏராளமான ஆந்திர அரசியல்வாதிகள் இந்த திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்த மக்களும், இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக, அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தெலுங்கானா பிரச்னை அடங்கியுள்ளதால், இந்தாண்டு காட்டுத் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட, மக்கள் தயாராகியுள்ளனர். இதனால், தெலுங்கானா மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. வழக்கமான உற்சாகத்துடன் இந்த ஆண்டு திருவிழா நடப்பதால், பொருட்கள், துணிகள் உள்ளிட்டவை விற்பனை சூடுபிடித்துள்ளது. தீவிர தெலுங்கானா ஆதரவாளர்களும் அதிகளவில் பங்கேற்று, பிரசாரங்கள் மூலம் மக்களை போராட்ட களத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், தெலுங்கானா பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சம்மக்கா, சாரக்கா திருவிழா கதை: மேடாரம் காட்டுப் பகுதியில் வசித்த பழங்குடியின மக்களிடம், வறட்சிக் காலத்தில் காக்கத்தியா மன்னர் வரி கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மக்கள், தங்கள் தலைவரை அணுகி விவரத்தைக் கூறியுள்ளனர். பழங்குடியின தலைவரின் ஆலோசனைப்படி, அவர்கள் வரி செலுத்தவில்லை. இதனால், காக்கத்தியா மன்னரின் படைகள், பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில், பழங்குடியின தலைவர் மட்டுமின்றி, அவரது படைகளை சேர்ந்தவர்களும் பலியாகினர். போர் கடுமையாக இருந்ததால், தலைவரின் மகன் ஜம்பன்னாவும், அங்குள்ள ஏரியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். அதன் பின், தலைவரின் மனைவி சம்மக்கா, அவரது மகள் சாரக்கா எனும் சாரலம்மா ஆகியோர் போரைத் தொடர்ந்தனர்.ஒரு கட்டத்தில், இவர்களின் பலம் குறையவே இருவரும் காட்டிற்குள் சென்றுவிட்டனர். அதன் பிறகு, இருவரும் வெளியே வரவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்குடியின பெண்கள் காட்டிற்குள் சென்ற போது, அங்குள்ள மரம் மற்றும் புற்றிற்கு அருகில், குங்குமம் சிதறிக் கிடந்தது.இதனால், சம்மக்கா, சாரக்கா ஆகியோர், வன தேவதைகளாக உயிருடன் இருப்பதாக, பழங்குடியினர் கருதினர். இந்த விழா தான்,"சம்மக்கா, சாரக்கா ஜாத்ரா என்ற பெயரில், திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.