பதிவு செய்த நாள்
08
பிப்
2012
11:02
பழநி : பக்தர்களின் சரண கோஷத்துடன், பழநியில் தைப்பூசத் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு, தேரில் அருள்பாலித்தனர். மாலை 4.55 மணிக்கு, நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. தேர் புறப்படும் முன் பழம், நவதானியங்களை பக்தர்கள் வீசினர். ஒரு மணி நேரத்தில் தேர், நிலையை அடைந்தவுடன், பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் நாகராஜன், வேணுகோபாலு எம்.எல்.ஏ., கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையற்கரசி, சித்தனாதன் சன்ஸ் ராகவன், கந்தவிலாஸ் பாஸ்கரன், பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து பங்கேற்றனர். திரண்ட பக்தர்கள்:தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சின்னக்குமாரர் மண்டபம் வழியாக மலைகோயிலில் பக்தர்கள் அனுப்பப்பட்டனர். இதனால், வெளிப்பிரகாரம் வெறிச்சோடியது. 1000 கிலோ பூக்களால், மலைக்கோயில் பாரவேல் மண்டபம், சன்னதியில் புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஒருவழிப்பாதை: * மலைக்கோயில் யானைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஐந்து இடங்களில் போலீசார் தற்காலிக தடை ஏற்படுத்தி, குறிப்பிட்ட நேர இடைவெளியில் பக்தர்களை அனுப்பினர்.
* கோயில் நிர்வாகம் சார்பில், மலைக்கோயிலில் அன்னதானம் நடந்தது. இருப்பினும், ஒருவழிப்பாதைக்காக அமைத்த தடுப்புகளால், தரிசனம் முடித்த பக்தர்கள் அமர வழியின்றி தவித்தனர்.
* மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில், சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வெகுநேரம் வெயிலில் காத்திருந்தனர். வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்க, வெளிப்பிரகார தரைதளத்தில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட்டது.
* "ரோப் கார் நேரத்தை அதிகரிக்காததால், மதியம் 1.30 முதல் 2.40 மணி வரை, பக்தர்கள் காத்திருந்தனர்.
* நெரிசலான நிலையில், பூங்கா ரோட்டில் மினிபஸ், ஆம்னி பஸ், வேன்கள் சென்றதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
* தற்காலிக பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து வழிகாட்டுதல் இன்றி பக்தர்கள் சிரமப்பட்டனர். மேற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருந்தனர்.