பதிவு செய்த நாள்
08
பிப்
2012
11:02
நாகர்கோவில்:நாகர்கோவில் நாகராஜாகோயில் தைப்பெருந்திருவிழாவை யொட்டி நேற்று(7ம்தேதி) தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்தனர். உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டனர். இன்று ஆராட்டுவிழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் நாகர்கோவில் நாகராஜா கோயிலும் ஒன்று. இக்கோயிலில் கந்தசஷ்டி விழா, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி, ஆவணி ஞாயிறு உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடக்கிறது. தை மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வருடம் தோறும் நடைபெறும் இந்த விழா பத்து நாட்கள் நடக்கிறது.இந்த வருட தைப்பெருந்திருவிழா கடந்த ஜனவரி 30ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. அறநிலையதுறை இணை ஆணையர் ஞானசேகர், கோயில் ஸ்ரீகாரியம் சிவன்பிள்ளை, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன் உள்ளிட்ட நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்று மாலை சமய சொற்பொழிவு, இரவு இன்னிசை, தொடர்ந்து புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.2ம் நாள் காலை சுவாமி புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளல், இரவு சுவாமி புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளல், மூன்றாம் நாள் சுவாமி புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளல், சிறப்பு பூஜை, சமயசொற்பொழிவு, இரவு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி ஆகியன நடந்தது.4ம் நாள் இரவு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 5ம் நாள் இரவு சுவாமி ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளல், 6ம் நாள் விழாவில் ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், சிறப்பு பூஜை, இரவு யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது.7ம் நாள் விழாவில் பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், இரவு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 8ம் நாள் காலை சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சமய சொற்பொழிவு, இரவு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது.9ம் விழாவான நேற்று (7ம் தேதி) காலை 8 மணியளவில், தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தின் துவக்கமாக அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மணி ஆகியோரை கோயிலில் இருந்து கொண்டு வந்து தேரில் அமர வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., ஹெலன்டேவிட்சன் எம்.பி., எஸ்.பி., பிரவேஷ்குமார், டி.ஆர்.ஓ., பழனிசாமி, கவுன்சிலர் சாகுல்அமீது, அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தொகுதி கண்கணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், ஸ்ரீகாரியம் சிவன்பிள்ளை, நாகர்கோவில் நகர பா.ஜ., தலைவர் ராஜன், பொருளாளர் முத்துராமன், நகர அ.தி.மு.க செயலாளர் சந்திரன், தைப்பெருந்திருவிழா குழு நிர்வாகிகள் முத்துகருப்பன், சுதாகர், விஸ்வநாதன், ரமேஷ், கார்த்திக், முத்துகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், சுடலையாண்டிபிள்ளை உள்ளிட்ட, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெண்கள் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.தேரானது நாகராஜா ரத வீதிகளில் வலம் வந்தது. தேர் பட்டு மற்றும் அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. தேரின் மீது அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மலர் சொரியப்பட்டது. தேர் மதியம் 11.58 மணிக்கு நிலைக்கு வந்தது.
தேரில் இருந்தவாறு அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மணி சமேதராய் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் கலந்து கொண்டபக்தர்களுக்கு மோர் பானம், பானாகாரம், வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுண் டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.மாலை ஆன்மிக சொல்லரங்கம், ஆன்மிகசொற்பொழிவு,பக்தி மெல்லிசை ஆகியன நடந்தது. தொடர்ந்து அலங்கார யானைபவனி, மற்றும் நாதஸ்வரஇசை, சிங்காரிமேளதாளத்துடன் சப்தாவர்ணம் நடந்தது.
இன்று ஆறாட்டு: இன்று (8ம் தேதி) 10ம் திருவிழாவை யொட்டி, காலை சிறப்பு அபிஷேகம், சிறப்புவழிபாடு ஆகியன நடக்கிறது. மாலை சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, சோலாபியூசன் இசைவிருந்து, இரவு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. பக்தர்கள் கோயிலில் நெருக்கடியின்றி சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் , நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், ஸ்ரீகாரியம் சிவன்பிள்ளை ஆகியோர் செய்து இருந்தனர்.முன்னதாக மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார் தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விடுமுறையால் குவிந்த பக்தர்கள்: நாகர்கோவில் நாகராஜாகோயில் தைப்பெருந்திருவிழாவை யொட்டி, நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் தேரோட்டம் நிகழ்ச்சியில் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.ரதவீதிகளில் பல்வேறு இடங்களில் தைப்பெருந்திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததை வரவேற்று தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.நேற்று காலை முதலே பக்தர்கள் கோயிலில் அதிகளவு வந்து இருந்தனர்.பக்தர்களுக்கு நெருக்கடியின்றி சாமி தரிசனம் செய்யும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பல்வேறு அரசியல் கட்சி சார்பில் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களை வரவேற்கும் விதமாக டிஜிட்டல் போர்டுகள் அங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது.