பதிவு செய்த நாள்
08
பிப்
2012
11:02
திருப்போரூர்: தைப்பூச விழாவையொட்டி, முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மற்ற கோவில்களிலும், முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தைப்பூச வழிபாட்டு மன்றம் சார்பில், பால்குட விழா நடந்தது. வேம்படி விநாயகர் கோவிலிலிருந்து, நூற்றுக்கணக்கானோர் பால்குடங்களுடன் ஊர்வலம் சென்றனர். "தினமலர் நாளிதழ் சார்பில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, கந்தசுவாமி மூலவர் ஸ்டிக்கர்கள், இலவசமாக வழங்கப்பட்டன.திருப்போரூர் அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில், திருவஞ்சாவடி தெருவில் உள்ள, செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு, நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி, நேற்று காலை சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது.சென்னை, மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, அமைந்தரை பக்தர்கள் பாதயாத்திரை வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்களுக்கு வல்லக்கோட்டை முருகன் அடிகளார் பக்தி சபா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.உற்சவ முருகப்பெருமான் மலர் அலங்காரத்துடன், உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 4 மணிக்கு சுவாமி கோவிலிலிருந்து புறப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.