பதிவு செய்த நாள்
08
பிப்
2012
12:02
வீரவநல்லூர்:திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் நடந்த தைப்பூச தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் முதன்மை பெற்றதும், கருணை ஆறும், பொருனை ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அழகுற அமைந்துள்ளது திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி- கோமதி அம்பாள் கோயில். இந்த கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று மதியம் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், கந்தசாமி முன்னிலையில் நடந்தது. முன்னதாக காலையில் பால்குடமும், சுவாமி, அம்பாள் வெள்ளி, ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு வலம்புரி சங்குடன் 108 சங்குகள் வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, கும்ப பூஜைகள் நடந்தன.தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடந்தது.அடுத்து தாமிரபரணி ஆற்றின் சரேந்திர மோட்ச தீர்த்தத்தில் அஸ்திரதேவரும், இந்திரனும் இறங்கி புனித நீராட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் சிவாய நம பக்தி கோஷம் முழங்கிட புனித நீராடினர். இரவு தெப்ப உற்சவமும், அம்பாள், சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது.நிகழ்ச்சியில் அமெரிக்க தொழிலதிபர் மோகன், நெல்லை எம்பி., ராமசுப்பு, அம்பாசமுத்திரம் முன்னாள் எம்எல்ஏ., பாலசுப்பிரமணியன், பஞ்., தலைவர் முத்து ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்தில் தேவ ஆனந்த் மேற்பார்வையில் சேரன்மகாதேவி சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சுத்தமல்லி சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் மேரி செய்திருந்தனர்.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.