பதிவு செய்த நாள்
08
பிப்
2012
12:02
கழுகுமலை:கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா நகரமான கழுகுமலை நகருக்கு பெருமை சேர்க்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது மலைக்குன்றும், இதனடியில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலும் தான். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும், தேரோட்டமும் மிகச்சிறப்பானதாகும். இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜன.29ந்தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று (பிப்.7) கோலாகலமாக நடந்தது. விழாவில் தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் செய்து அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சட்டத்தேரில் எழுந்தருளல் பூஜைகள் நடந்தது. இதையடுத்து தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கழுகுமலை டவுண்பஞ்., தலைவர் சுப்பிரமணியன், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் ஆகியோரன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர். தொடர்ந்து முருகனின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேர்வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் தெற்கு ரதவீதி, பஸ் ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை வாசல் தெரு, கீழபஜார் வழியாக மீண்டும் தெற்கு ரதவீதி வந்து சுமார் 12.45 மணியளவில் நிலைக்கு வந்தது. தொடர்ந்து கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் பவுர்ணமி கிரிவலமும், இரவில் இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. விழாவில் உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி, பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், 63 நாயன்மார் குருபூஜைக்குழு செயலாளர் தேவகளை ஆனந்தன், டாக்டர் சண்முகம், தொழிலதிபர் ஜெயக்கொடி, சிவாச்சாரியார்கள் உள்பட கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கழுகுமலை போலீசாரும், தேரோடும் வீதிகளில் மின்பாதுகாப்பை கழுகுமலை உபமின் நிலையத்தினரும் செய்திருந்தனர்.இதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி அதிகாலையில் நடைதிறப்பும், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதையடுத்து சுப்பிரமணியர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மேலும் செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு உட்பட்ட சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கதிர்வேல் முருகனுக்கும், தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை சொர்மலை கதிர்வேல் முருகன் கோயில் கட்டளைதாரர்கள் காளிராஜன், நாகஜோதி ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு பூஜைகளை ஹரிஹரன் மற்றும் மணி ஆகிய பட்டர்கள் செய்தனர். விழாவில் செண்பகவல்லியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், கட்டளைதாரர்கள், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.