சத்குரு சங்கீத சமாஜம் வைர விழா : பைரவி ராகத்தில் மயக்கிய கிருஷ்ணா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2012 12:02
மதுரை :மதுரை சத்குரு சங்கீத சமாஜம் வைர விழாவை முன்னிட்டு நடந்த கச்சேரியில் சங்கீத வித்வான் டி.எம். கிருஷ்ணாவின் ராக ஆலாபனை இசை பிரியர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டு கச்சேரி மதுரை மீனாட்சியின் துதியாக தொடங்கியது. "மாதே மலயத்வஜ என தொடங்கும் "கமாஸ் ராகக் கீர்த்தனை, ஆதிதாளம், சிறந்த ஸ்வர - சொற்கட்டுகளுடன் கூடிய "சிட்டைஸ்வரம் நிறைந்து சிறந்த படைப்பாக அமைந்தது. தொடர்ந்து தியாகராஜர் கிருதி - ஹரிகாம்போதி ராகம், ஆதிதாளம், "எந்தரானி என துவங்கிய பாடலில் சிறந்த நிரவலையை கேட்க முடிந்தது. அடுத்தது, லலிதா ராகத்தில் முத்துச்சாமி திட்சிதர் இயற்றிய "ஹிரண்மயி லஷ்மிமம் - சதா பஜா என்ற அற்புதமான சமஸ்கிருத கீர்த்தனை நல்ல உச்சரிப்போடும் பக்தியோடும் பாடியதை உணர முடிந்தது. "கீத வசனாம் - லலிதாம் - மாதுன காந்தாம் என்ற வரிகளில் நீரவலும், கற்பனா ஸ்வரங்களும் ரசிகர்களின் கை தட்டலைப் பெற்றன. தொடர்ந்து "உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா என்ற தமிழ்ப்பாடல் கல்யாணி ராகம், ஆதிதாளம், நல்ல இசை விருந்தாக செவிக்கு அமைந்தது. கிருஷ்ணா குழுவில் "வயலின் ஆர்.கே.ஸ்ரீராம்குமார், "மிருதங்கம் கே.வி.பிரசாத், "கடம் என்.குருபிரசாத் இடம் பெற்றனர். இன்று (பிப்.,8) மாலை 6 மணிக்கு கருணா சாகரி குழுவின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது.