பதிவு செய்த நாள்
08
பிப்
2012
12:02
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா: சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஆலயங்களில் பிப்ரவரி 07ம் தேதியன்று தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாக்களுள் இதுவும் ஒன்று. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், கேலாங் கிழக்கிலுள்ள அருள்மிகு சிவன் கோயிலில் இருந்து சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பவனி வர, அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கருடசேவையில் சர்வ அலங்கார நாயகராக எதிர்கொண்டழைக்க, அருள்மிகு சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற தைப்பூசத் திருவிழா, சிராங்கூன் சாலை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் கோலாகலமாகத் துவங்கியது. முன்னதாக 6ம் தேதி நள்ளிரவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று, பால்குட ஊர்வலத்தைப் பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ உ.வே.சீனிவாச பட்டாச்சாரியாரும், ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் ராஜேந்திரனும் துவக்கி வைத்தனர். சுமார் 4.05 கி.மீ., தூரத்திலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் உள்ள ஸ்ரீ முருகப் பெருமானுக்குக் காணிக்கை செலுத்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பாத யாத்திரையாகச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாகும். இதே நேரத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலிலும் அபிஷேகங்கள் துவங்கி நடைபெற்றன. நண்பகல் வரை 8300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடக் காணிக்கை செலுத்தி விட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோலாலம்பூரில் தைப்பூச ரத ஊர்வலம்: கோலாலம்பூர் : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 05ம் தேதியன்று ரத ஊர்வலம் நடைபெற்றது. தமிழக கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றுடன் முருகப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி, கோலாலம்பூர் நகர வீதிகளில் வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள், தேர் பவனி வரும் பாதைகளில் தேருக்கு முன் தேங்காய் உடைத்து தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக வழிதோறும் நீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் உள்ள அருள்மிகு சிவ விஷ்ணு ஆலயத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பிப்ரவரி 07ம் தேதியன்று ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது. மாலை 5.15 மணிக்கு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்களைத் தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு ரதோற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டனர். அழகுற அமைக்கப்பட்டிருந்த ரததத்தில் வள்ளி, தெய்வானையுடன் வலம் வந்த உற்சவ மூர்த்தி முருகப் பெருமானைக்கு ககாணிக்கையாளக பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி வந்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
தைப்பூச திருவிழா போட்டோ ஆல்பம்