பதிவு செய்த நாள்
20
அக்
2018
03:10
திருச்சி: திருச்சி அருகே அச்சப்பன் கோவிலில் நடந்த பேய் ஓட்டும் திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சாட்டையடி வாங்கி வேண்டுதல் நிறைவேற்றினர்.
திருச்சி மாவட்ட எல்லையான தா.பேட்டை அருகேயுள்ள வெள்ளாளப்பட்டியில் அச்சப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நுாதன திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல், விஜயதசமியை முன்னிட்டு, இந்த ஆண்டும், நேற்று பேய் ஓட்டும் நுாதனத் திருவிழா நடந்தது. இதற்காக சில நாட்கள் முன்பிருந்தே கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. நேற்று மாலை, 4 மணிக்கு துவங்கிய சாட்டையடி திருவிழாவில், திருச்சி, நாமக்கல், கரூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இந்த சாட்டையடி திருவிழாவில் பங்கேற்று, சாட்டையடி வாங்கினால் பேய் பிடித்த பெண்களிடம் இருந்து துஷ்ட சக்திகள் நீங்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும். பெண்களின் தீராத நோய்கள் தீரும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவர் என்பது ஐதீகம். நேற்று நடந்த சாட்டையடி திருவிழாவில் கோவில் மைதானத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலைவிரி கோலமாக மண்டியிட்டு அமர, அவர்களை கோமாளி வேடமிட்ட பூசாரி சாட்டையால் அடித்து, பேயை விரட்டினார். மற்ற பெண்களும் அதேபோல் சாட்டையடி வாங்கி தங்களின் திருமண தடை நீங்கவும், மனநோய் நீங்கவும் வேண்டுதல் நிறைவேற்றி வழிபாடு நடத்தினர். இந்த விழா நேற்று மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு, 9 மணிவரை நடந்தது.
சாட்டை திருவிழா குறித்து வந்திருந்த பெண்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால், பேய் பிடித்திருந்தால் விலகும், மனநிலை சரியில்லாதவர்கள் குணமடைந்து விடுவர். திருமணத்தடை உள்ளவர்களுக்கு உடனடியாக திருமண பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.