திருநெல்வேலி:தைப்பூசத் திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்காக நடராஜர் ஆனந்த திருநடனம் ஆடிய காட்சி நெல்லையப்பர் கோயில் சவுந்தரசபையில் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான இன்று (9ம் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது.நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் திருநாளன்று "திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் நடந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
10ம் திருநாளான தைப்பூசத்தில் தாமிபரணியில் தீர்த்தவாரி நடந்தது.ஆனந்த நடனமாடிய நடராஜர்மார்கழி திருவாதிரை திருவிழாவில் நடராஜர் ஆடிய நடனம் ஆகோரமாக இருந்ததாம். இதைப்பார்த்த அம்பாள் தனக்காக ஆனந்த நடனம் புரியுமாறு நடராஜரை கேட்டுக் கொண்டாராம். காந்திமதியம்மன் சன்னதி அருகே அமைந்துள்ள சவுந்திரசபையில் அம்பாளுக்காக, "நடராஜர் ஆனந்த திருநடனம் ஆடிய நிகழ்வு நேற்று நடந்தது.சுவாமியின் நடனத்தின் அம்பாள் மெய்மறந்து இருந்த போது, சுவாமி திடீரென மாயமானார்.
சுவாமியை தேடி, நெல்லையப்பர் கோயில் உட்பகுதி, பொற்றாமரை குளம் ஆகிய பகுதிகளில் தேடிவிட்டு, சந்திவிநாயகர் சன்னதி முன்பு ரதவீதிகளில் அம்பாள் வலம் வருகிறார்.அப்போது நடராஜர், "நெல்லையப்பராக மாறி, காந்திமதி அம்பாளுக்கு காட்சி அளித்தார். அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றி தீபாராதனை நடந்தது.விழாவின் போது நெல்லையப்பர் கோயில் யானை "காந்திமதி சுவாமி, அம்பாளுக்கு முன்னதாக நடந்துவந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான இன்று (9ம் தேதி) இரவு நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகள் தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.