பதிவு செய்த நாள்
22
அக்
2018
02:10
சனிக்கிழமை மாலை ஆறு மணியிருக்கும். மீனாட்சியம்மன் கோயிலுக்கு புறப்பட்டேன். வைகை மேம்பாலத்தில் ஒருபெண் பின்தொடர்ந்தாள். என்னைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு வேறு. ஆள் இல்லாத இடத்தில் வழிப்பறி செய்வாளோ... எனக் கருதி வேகமாக நடந்தேன். அதே வேகத்தில் அவளும் வந்தாள். என்ன செய்வது?
நடைபாதையில் பிச்சைக்காரன் படுத்திருந்தான். உடம்பெல்லாம் சொறி சிரங்கு. குளித்து எத்தனை வருடம் ஆச்சோ? துர்நாற்றம் தாங்கவில்லை. திரும்பிப் பார்த்தேன். அவள் அருகில் வந்து விட்டாள். வழியை மறித்தபடி அழுக்குப் பிச்சைக்காரன். வழிப்பறிக்காரியின் கைக்கெட்டும் தூரத்தில் நான். போகவும் வழியில்லை; நிற்கவும் பயம்.
“அம்மா பச்சைப்புடவைக்காரி” அலறினேன் .
“அருகில் இருக்கும் என்னை அழைக்க ஏன் கூச்சலிடுகிறாய்?”
திடுக்கிட்டேன்.
ஆமாம்! அவள் வழிப்பறி கொள்ளைக்காரி தான். என்னைத் தன் வழிக்குத் திருப்பி, என் இதயத்தை திருடிய அழகிய வழிப்பறி கொள்ளைக்காரிதான். என்னை அடிமையாக ஏற்ற கோலக்கிளி.
“உங்களைப் பின்தொடர்ந்து உலகமே வரும் போது நீங்கள் என்னைத் தொடர்ந்து...”
“எல்லாம் உன்னைக் காப்பாற்றத் தான்”தாயே எனக் கதறியபடி காலில் விழுந்தேன்.
“இம்முறை உனக்கு மேலான ஞானம் அளிக்கப் போகிறேன். வார்த்தைகளால் அல்ல. செய்முறை விளக்கமாய்”
அதுவே நான் கேட்ட கடைசி வாக்கியம்.
என்ன ஆயிற்று? என் கதை முடிந்ததா? அப்படித்தான் இருக்கவேண்டும். அவள் காலடியில் விழுந்ததும் உயிர் பிரிந்தது. உடலை விட்டு பிரிந்து ஒளியுருவாக அன்னையின் சன்னதியில் நின்றேன். முன்னால் அன்னை மாகாளியாக நின்றாள். என் அருகில் மற்றொரு ஒளியுருவம் இருந்தது. பாவம் என்னைப் போல இறந்திருப்பார் போலும்!
அன்னை என்னிடம், “என்முன் ஒளியுருவாக நிற்கும் ஆன்மாவே! உன் பக்கத்தில் நிற்கும் ஒளியுருவைப் பார்.”
பார்த்தேன்.
“இன்னும் உன்னிப்பாகப் பார். உனக்கும், அதற்கும் வித்தியாசம் தெரிகிறதா?”
“என்ன தாயே விளையாட்டு? ஒளியுருவில் எப்படி வித்தியாசம் இருக்க முடியும். எங்களுக்கு வடிவம் இல்லை. நிறம் இல்லை. ஏன் ஒளியின் தன்மையில் கூட வேறுபாடு இல்லை. நாங்கள் ஏன் தனித்தனியாக இருக்கிறோம் என்பது தான் புரியவில்லை.”
அன்னை கலகலவென சிரித்தாள்.
“நான் சொல்கிறேன் கேள். சாகும் முன் பாலத்தில் கிடந்த பிச்சைக்காரனைப் பார்த்து முகம் சுளித்தாயே நீ. ஞாபகம் இருக்கிறதா?”
“ஏன் இல்லை? உயிர் பிரியும் முன் நடந்ததாயிற்றே, எப்படி மறக்கும்?”
“அந்தப் பிச்சைக்காரன் தான் உன் அருகில் நிற்கும் இந்த ஒளியுருவம்.”
அந்நிலையில் யாரோ மண்டையில் அடித்தது போலிருந்தது.
உடலுடன் இருந்த போது இருந்த எண்ணம் மீண்டும் மனதில் எழுந்தது.
அவனது வயிறு ஒட்டியிருந்தது. காலையிலிருந்து ஏதாவது சாப்பிட்டிருப்பானா? சந்தேகமே! நான்? காலையில் காபி. ஒன்பதரை மணிக்கு டிபன். மதியம் சாப்பாடு. மாலை ஒரு காபி.
இவ்வளவையும் உள்ளே தள்ளியிருக்கிறேன். நான் சாகாமல் இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்தில் இரவு உணவு கிடைத்திருக்கும்.
பிச்சைக்காரனுக்கு உணவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
நானோ மெத்தப் படித்தவன். கஷ்டமான ’சி.ஏ.,’ தேர்வில் வெற்றி பெற்றவன். பிச்சைக்காரன்? பள்ளிக்கூடம் பக்கம் மழைக்காக ஒதுங்கியிருப்பானா? சந்தேகமே.
நான் காலையில் ஒரு முறை குளித்தேன். கோயிலுக்குச் செல்ல இருந்ததால் மாலையிலும் குளித்தேன். பிச்சைக்காரன் குளித்து எத்தனை மாதம் ஆகிறதோ யாருக்கு தெரியும்?
எனக்கு உடலில் பெரிய வலியோ, உபாதையோ எதுவுமில்லை. பிச்சைக்காரனின் உடலில் என்ன என்ன நோய்கள் இருக்கின்றன என பட்டியலிடவே பல நாளாகுமே! உடம்பெல்லாம் சொறி சிரங்கு. அவற்றிலிருந்து ரத்தமும் சீழும் வடிந்துகொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது..
எனக்கு வீடு இருக்கிறது. என்னைக் கொண்டாட உறவினர் பலர் இருக்கின்றனர். தாய், மனைவி, மகள், மருமகன், தம்பிகள், தங்கை, நண்பர்கள் என்று தாங்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. பிச்சைக்காரனுக்கு யார் இருக்கிறார்கள்? யாராவது இருந்தால் அவன் அனாதையாக கிடப்பானா?
பிச்சைக்காரனும் ஒரு மனிதன்; நானும் ஒரு மனிதன். இருவருமே கடவுளின் படைப்புக்களே. ஆனால் எங்களுக்குள் தான் எத்தனை வேறுபாடு! கொஞ்சம் பொறுங்கள். இந்த வேறுபாடெல்லாம் நாங்கள் சாகும் வரை தான். இதோ இருவரின் காலமும் முடிந்து பச்சைப்புடவைக்காரியின் முன் நிற்கிறோம். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. இருவரும் ஒரே மாதிரியான ஒளியுருவாகவே இருக்கிறோம். அவனது ஒளியுருவிலிருந்து எந்த நாற்றமும் வரவில்லை. அப்படியே வந்தாலும் எனக்கு தெரியாது. ஏனெனில் சாகும் போது தான் என் மூக்கும் செத்துவிட்டதே! செத்த பின் ’சி.ஏ.,’ படிப்பால் என்ன பயன்? குளித்தல், வியாதி, துர்நாற்றம், தோலின் நிறம் எல்லாம் உடலோடு தொடர்புடையவை. உடல் போன பின் அவையும் காணாமல் போகும்.
எனக்கு மன வலிமை அதிகம். பலர் கணினியில் போடும் கணக்குகளை மனக்கணக்காக சொல்லிவிடுவேன். ஆனால் உடலோடு மூளையும் செத்துவிட்டதே! சொல்லப்போனால் உடலில் முதலில் சாவது மூளைதானே! அதனால் தானே மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புக்களை தானம் செய்ய முடிகிறது? ஆக, அறிவால் ஏற்பட்ட வித்தியாசங்கள். நான் பெற்ற பட்டங்கள்., எழுதிய புத்தகங்கள்,போட்ட கணக்குகள் எல்லாம் கோவிந்தா.
இதோ எல்லாம் முடிந்தபின் எஞ்சி இருப்பது ஒளிக்கீற்று மட்டுமே. இந்தப் பட்டயக் கணக்கனுக்கும் அதே ஒளிக்கீற்று தான். அந்த அழுக்குப் பிச்சைக்காரனுக்கும் அதே ஒளிக்கீற்று தான்.
என் முன்னால் வானுக்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தபடி நின்றிருந்த பச்சைப்புடவைக்காரியைப் பார்த்தேன்.
அந்த ஒளிக்கீற்று வடிவில் இருந்த போதிலும் அழுகை வந்தது. கூடவே ஒரு எண்ணமும் வந்தது. நான் பச்சைப்புடவைக்காரியைப்
பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் இந்தப் பிச்சைக்காரன் செய்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அதற்காக என்னை சொர்க்கத்துக்கு அனுப்புவாளோ இவள்?
இதைப் புரிந்து கொண்ட பச்சைப்புடவைக்காரி உறுமினாள்.
“நிச்சயமாக இல்லை. உனக்கு என்ன குறை வைத்தேன்? பெற்றோர், மனைவி, மக்கள் என்று உண்மையாக நேசிக்கும் உறவு, நட்பு,கல்வி. திறமை என எல்லாம் கொடுத்தேன். இதில் பாதி பெற்றவர்கள் கூட உன்னைவிட சிறப்பாக எனக்குப் பணி செய்திருக்கிறார்கள். அவர்களை ஒப்பிட்டால் நீ ஒன்றும் செய்யவில்லை. அதற்கே உனக்கு அகங்காரம் தலை விரித்தாடுகிறது.”
தலை குனிந்தபடி அழுதேன்.
“இவனைப் பார். இவனுக்கு நான் ஏதும் கொடுக்கவில்லை. பிச்சையெடுக்கும் அவலநிலை. பலநாள் பட்டினி கிடந்திருக்கிறான்.
இந்நிலையிலும் கிடைத்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தான். ஒருநாள் நல்லமழை. சாப்பிட ஏதுமில்லை. எப்படியோ சிரமப்பட்டு ரொட்டித்துண்டு கிடைத்தும், அதை தான் உண்ணாமல், அருகில் இருந்த குட்டிகளை ஈன்ற தாய் நாய்க்கு ஊட்டினான். இப்படி என்றாவது ஒருநாள் செய்திருக்கிறாயா”
இல்லையே தாயே! வேளா வேளைக்கு வக்கணையாக கொட்டிக் கொண்டவன் நான். உணவில் குறை இருந்தால் அதை மனைவி புண்படும் வகையில் இடித்துக் காட்டியதுண்டு.
என்னிடம் உபரியாக இருந்த பொருட்களை எப்போதாவது சிலருக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், இந்தப் பிச்சைக்காரன் போல் தனக்கு கிடைத்த ஒரே ரொட்டியை கூட நாய்க்குக் கொடுக்கும் அளவிற்கு நான் ஒன்றும் நல்லவனில்லை.
கதறியபடி அன்னையின் காலில் விழுந்தேன். சற்றே திரும்பி ஒளியுருவாக நின்ற பிச்சைக்காரனின் காலிலும் விழுந்தேன்.
“ஐயா..அடுத்த பிறவியில் உங்களைப் போல் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும் என ஆசி கொடுங்கள்” என கண்ணீர் மல்க வேண்டினேன்.
முகத்தில் சில்லென்று காற்று பட்டதும் கண் விழித்தேன். அதே மேம்பாலம். முன்னால் பச்சைப்புடவைக்காரி. சற்று தள்ளி பிச்சைக்காரன். நடந்ததெல்லாம் கனவா?
“ஆம். ஆனால் அதன் மூலம் அறிந்த உண்மைகள் மறக்காதே”
“சற்று பொறுங்கள் தாயே! அந்த அழுக்குப் பிச்சைக்காரனைத் தொட்டு வணங்கி வருகிறேன்”
“அவசியமில்லை. அங்கே பார்”பிச்சைக்காரன் இருந்த இடம் காலியாக இருந்தது.
“பிச்சைக்காரனாக வந்ததும் நான் தான்.. உனக்குப் பாடம் புகட்ட எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியிருக்கிறது பார்த்தாயா?”
அந்த அன்பரசியின் கால்களில் விழுந்து அழுதேன்.