மாலை நேரம். வயலின் வரப்பில் ஒரு இளம்தம்பதி பேசிக்கொண்டு வந்தனர். அந்த வயல் அப்போது தான் அறுவடை செய்யப்பட்டிருந்தது. சீராக அறுக்கப்பட்டிருந்த நெற்கதிர்களைப் பார்த்த மனைவி சொன்னாள். “கத்தரிக்கோலால் எவ்வளவு நேர்த்தியாக கதிர்களை வெட்டியிருப்பதை பாருங்கள்” “கத்திரிக்கோலா? என்ன உளறுகிறாய்... இது அரிவாளால் வெட்டப்பட்டது”
“அரிவாளால் இப்படி நேர்த்தியாக வெட்ட முடியாது. கத்திரிக்கோலால் தான் வெட்டியிருப்பார்கள்” “ இதற்கு முன் கதிர் அறுப்பதை பார்த்ததில்லையா...?” “ஏன்... இல்லை! எங்கள் ஊரில் கத்தரிக்கோலால் தான் வெட்டுவார்கள்” “யாராவது கத்தரிக்கோலால் கதிர் அறுப்பார்களா? உனக்கு விவரம் போதவில்லை; வாயை மூடிக் கொண்டிரு” என்றான் கோபமாக. அவளும் கோபம் கொண்டாள். “நான் சொல்வதை ஏற்க மறுக்கும் உங்களின் நினைப்பு தவறானது” “அதையே தான் நானும் சொல்கிறேன். பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது” “ஏன்... பிடிவாதம் ஆணுக்கு மட்டுமே உரியதா” “சும்மா பைத்தியம் போல உளறாதே” “நான் அப்படித் தான் பேசுவேன்” என்றாள். சட்டென்று அவளின் கன்னத்தில் அறைந்தான் கணவன். மனைவியும் கணவனின் கன்னத்தில் அறைந்தாள். வயல்பகுதியைக் கடந்த அவர்கள் ஒரு ஆற்றுப்பாலத்தின் மீதேறினர். “நான் சொல்வது தான் சரி” என்று சொல்லியபடியே மனைவி தவறி ஆற்றுக்குள் விழுந்தாள். விழுந்தவள், “நான் சொல்வது தான் சரி; அது கத்திரியால் தான் வெட்டப்பட்டது” என்றாள். அவளைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல், “ நான் சொல்வதே சரி; அது அரிவாளால் தான் அறுக்கப்பட்டது” என தண்ணீரில் போகும் மனைவியைப் பார்த்து கத்தினான் கணவன். ஆற்று வெள்ளத்தில் சற்று தூரம் இழுத்துச் சென்ற பின்னரே ’ஐயோ என் மனைவி’ என்ற பதற்றமுடன் தண்ணீருக்குள் குதித்தான். ஆண்களே...மனைவியை நேசியுங்கள். பெண்களே...கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது போல கணவருக்கும் கீழ்ப்படியுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுங்கள். மனநிம்மதிக்கான வழி இதுவே.