பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அரசு கல்வி நிறுவன நூலகங்களில் வைப்பதற்காக, பகவத் கீதை, ராமாயணம் புத்தகங்களை வாங்க உத்தரவிட்ட, கல்வித்துறையின் உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரியில் செயல்படும் நூலகங்களில் வைப்பதற்காக, பகவத் கீதை மற்றும் ராமாயணம் புத்தங்களை வாங்க, மாநில கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.கல்வி நிறுவன நூலகங்களில், மதம் சார்ந்த புத்தகங்களும் இடம் பெறுவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, அரசு சார்பில் கூறப்பட்டது.
எனினும், மாநில கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து, மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான, ஒமர் அப்துல்லா கூறியதாவது:கல்வித் துறை அதிகாரி களின் இந்த உத்தரவு, கடும் கண்டத்திற்குரியது. மதம் சார்ந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டுமென்றால், அதில், அனைத்து மதங்களை சார்ந்த புத்தகங்களும் இடம் பெற வேண்டும்.ஹிந்து மத கருத்துகளை வலியுறுத்தும், பகவத் கீதை, ராமாயணம் புத்தங்களை மட்டும் வாங்க உத்தரவிட்டது ஏற்புடையதல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.இதே போல், காங்., கட்சியின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த புத்தகங்களை வாங்க பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை திரும்ப பெறுவதாக, மாநில கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.