பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
தஞ்சாவூர்: மதுரை, சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திரரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 13ம் தேதி இரவு வல்லபபெருமாள், சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய, நான்கு ஐம்பொன் சிலைகள் திருடு போயின. இதுதொடர்பாக காடுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலைகளை திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், 15ம் தேதி மதுரை, விளாம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில், காணாமல் போன நான்கு ஐம்பொன் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி, அவற்றை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கும்ப கோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிலைகளை நேற்று (அக்., 23ல்) ஒப்படைத்தனர். சிலைகளை பார்வையிட்ட நீதிபதி அய்யப்பன் பிள்ளை, நான்கு சிலைகளையும், வல்லப பெருமாள் கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.