பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
சூரத்,:குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த கோடீஸ்வர ஜவுளி வியாபாரியின் மகன் மற்றும் மகள், சமண மத துறவறம் ஏற்க முடிவு செய்துள்ளனர்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சூரத்தை சேர்ந்தவர் பரத் வோரா, 57. ஜவுளி வியாபாரியான இவருக்கு, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.இவர்களில், மீட் யஷ், 20, என்ற மகனும், ஆயுஷி, 22, என்ற மகளும், கோடீஸ்வர வாழ்க்கையை விரும் பாமல், துறவறம் ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன், பள்ளிப் படிப்பை முடித்த இருவரும், பாவ்நகர் மாவட்டம், பாலிடானாவில் உள்ள, ஆச்சார்ய பகவான் யஷோவரம் சுரிஷ்வர்ஜி மஹராஜ் என்ற சமண மத குருவிடம், ஆன்மிக கல்வி கற்க சேர்ந்தனர்.
இந்நிலையில், மீட் யஷ் மற்றும் ஆயுஷி இருவரும், துறவிகளாக விருப்பம் தெரிவித்தனர். தன் தாயின் விருப்பப்படி துறவறம் ஏற்பதாக ஆயுஷியும், தந்தையுடன் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு, அதில் மன நிறைவு கிடைக்காததால், துறவு ஏற்க முடிவு செய்ததாக, மீட் யஷ்ஷும் கூறினர்.இதுகுறித்து, இவர்களின் தந்தை பரத் கூறியதாவது:என் குடும்பத்தில், முதல் முறை யாக, இருவர் துறவறம் ஏற்பது மகிழ்ச்சியளிக்கிறது. சூரத்தில், டிச.9ல், துறவறம் ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு மகனையும் துறவு கோலத்தில் பார்க்க ஆசைப்படுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.