பதிவு செய்த நாள்
24
அக்
2018
04:10
பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 5,625 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோயில் உலக பிரசித்திபெற்றது, புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுககிணறு, ஒரேகல்லிலில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உலக அளவில் வியக்க கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள 75 மூட்டை என 5,625 கிலோ அரிசியால் சாதம் சமைத்து காலை 9 மணி முதல் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது , இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டும் அக்., 24ம் தேதியன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 22ம் தேதி கணக்கவிநாயகருக்கு மகாபிஷேகமும், 23ம் தேதி திருவிளக்கு பூஜை, பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இன்று அக்., 24ம் தேதி காலை 9 மணி முதல் அன்னம் சாத்த துவங்கி அன்னாபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கோமகன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.