காரைக்கால்: காரைக்காலில் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சனீஸ்வரபகவான் கோவில்,பார்வதீஸ்வரர் கோவில்,அண்ணாமலை ஈஸ்வரர், கையிலாசநாதர் கோவில்,சோமநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன்லிங்கத்தில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக பல்வேறு திரவங்களில் அபிேஷகம் சிறப்பாக நடைபெற்றது.
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன்.அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்.மற்ற மாதங்களில் செய்யலாமே ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும் இதனால் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் முன்னிட்டு ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.