பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர்.
காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6.30க்கு தேரோட்டம் துவங்கியது. கலெக்டர் மதிவாணன், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், நகராட்சி தலைவர் மணிமாறன் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இரவு 7.15க்கு தேர் ராஜவீதியில் நிலை நிறுத்தப்பட்டது.
மீண்டும் நேற்று மாலை 6.30க்கு தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். கிரிவலப் பாதையிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே இரவு 8 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்று மாலை 6.30க்கு மீண்டும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தி வருகின்றனர். பிற மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக தைப்பூச திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் அடிவாரப் பகுதியில் தங்கியிருந்து, ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் சாவடிப்பாளையம் சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும், 12ம் தேதி பகல் 11 மணிக்கு பரிவேட்டை, தெப்பஉற்சவ விழா நடக்கிறது. 13ம் தேதி, பகல் 12க்கு மஹாதரிசனம் நடக்கிறது. 16ம் தேதி, காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஸ்வாமி மலைக்கு எழுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது.