சதயவிழாவுக்கு பக்தர் வழங்கிய ரதம் வெட்டவெளியில் நிறுத்தியதால் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2018 02:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் சதயவிழாவுக்காக, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர் ஒருவர் வழங்கிய ரதத்தை, சிறியதாக பிளாஸ்டிக் பையை வைத்து மூடி, பாதுகாப்பற்ற நிலையில், வெட்ட வெளியில் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பெரியகோவில் சதயவிழாவின் போது, திருமுறை திருவீதியுலா நடப்பது வழக்கம். அதற்கான ரதம் சேதமடைந்து விட்டது. இதையடுத்து, ராமலிங்கம் என்ற பக்தர், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை நாரிழையால் ஆன, பெரியகோவில் வடிவ ரதத்தை உபயமாக, கடந்த, 11ம் தேதி கோவிலுக்கு வழங்கினர்.இந்நிலையில், சதயவிழா கடந்த, 20ம் தேதி முடிந்தும், 10 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட ரதத்தை கோவில் நிர்வாகம் சிறிய பிளாஸ்டிக் பையால், மூடி கோவில் வளாகத்தில் வெட்ட வெளியில் உதாசீனமாக வைத்துள்ளது, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விலைமதிப்பிலான ரதத்தை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.