பதிவு செய்த நாள்
30
அக்
2018
12:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ஸ்ரீராமரின் வில்லுாண்டி தீர்த்த கிணறு சேதமடைந்து, கடல் நீர் புகுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமர் ராமேஸ்வரம் திரும்பும் போது, சீதைக்கு தாகம் ஏற்பட்டது. ராமர் தன் வில்லை கடலோரத்தில் ஊன்றியதும், அதில் இருந்து நல்ல குடிநீர் பீறிட்டு வந்தது. இதனை சீதை பருகி தாகம் தணித்ததாக வரலாறு. இது ‘வில்லுாண்டி தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து 7 கி.மீ.,துாரத்தில் தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கிராமத்தில் கடலோரத்தில் உள்ள ராமரின் இத்தீர்த்த கிணற்றில் நீர் பருகினால் நோயின்றி வாழலாம் என்பது ஐதீகம். இதனால் தினமும் ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இத்தீர்த்தத்தை பருகி செல்கின்றனர்.சு2011ல் இங்கு மத்திய சுற்றுலா நிதி ஒரு கோடி ரூபாய் செலவில் கடல் மீது துாண்கள், நடைமேடை அமைத்தனர். ஆனால் கடல் அலைக்கு தாக்கு பிடிக்காமல், தீர்த்த கிணற்றை சுற்றி இருந்த கான்கிரீட் சேதமடைந்து, கிணற்றுக்குள் கடல்நீர் புகுந்து உப்புநீராக மாறியது. இதுகுறித்து ஓடிசா புவனேஸ்வர் சேர்ந்த லெட்சுமிபட்நாயக்,55, கூறுகையில், ராமரின் தீர்த்தத்தை பருக நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் கடல்நீர் கலந்து உப்பு நீராகியது வருத்தமாக உள்ளது. இதனை பராமரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.