வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில், மழை மாரியம்மன் பள்ளி தேவசேனா உடனுறை திவேலன் மலையாளவீரன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த மூன்றாம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். பின்னர், காலை 10 மணியளவில் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில், வேதாரண்யம் எம்.எல்.ஏ., காமராஜ் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் மூல விக்கிரஹங்களுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அம்மன் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம தலைவர் மயில்வாகனன் தலைமையில், பஞ்சாயத்தார்கள் , பகுதி தலைவர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.