மதுரை ரூ.50 கோடி மீனாட்சி அம்மன் கோயில் இடம் மீட்பு 50 ஆண்டு சட்டப் போராட்டத்துக்கு தீர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2018 12:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் நடவடிக்கை நேற்று துவங்கியது. 50 ஆண்டாக நடந்த சட்டப் போராட்டத்துக்கு கோயில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் தெற்கு வெளிவீதி ஒண்டிமுத்து வீதி மீனாட்சி பள்ளத்தில் உள்ளது. அவ்விடம் முன்பு தென்னந்தோப்பாக இருந்தது.
கட்டளைதாரராக ஒண்டிமுத்து என்பவரை கோயில் நிர்வாகம் நியமித்தது. தென்னந்தோப்பு வருவாய் கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டது. ஒண்டிமுத்து இறப்புக்கு பின் கோயில் இடம் பல தரப்பினருக்கு விற்கப்பட்டது. இதில் பழமையான தியேட்டரும் அடங்கும். 98 சென்ட் நிலத்தில் தியேட்டர் மற்றும் 50 சென்ட் இடத்தில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளதாக கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.தியேட்டர் உட்பட கோயில் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றவும், தியேட்டர் கட்டட மதிப்பு 2 கோடி ரூபாயை கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டது. கோயில் நிர்வாகம் 2 கோடி ரூபாயை டெபாசிட் செய்தது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இணை கமிஷனர் நடராஜன், மேற்கு தாசில் தார் செல்வராஜ், போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார், கோயில் வழக்கறிஞர் மனோகர் முன்னிலையில் நீதிமன்ற ஊழியர் இளங்கோ ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்போரை வலியுறுத்தினார்.
காலி செய்ய மறுத்து குடியிருப்போர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் வீட்டிற்கு வெளியே பூட்டு போட்டு வீட்டிற்குள் பதுங்கினர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் இரண்டு கடைகள், இரண்டு வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே வைத்து சீல் வைத்தனர். தியேட்டர் உட்பட எஞ்சிய ஆக்கிரமிப்புகளை விரைவில் காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
50 ஆண்டாக நடந்த சட்டப் போராட்டத்துக்கு கோயில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது. எல்லீஸ்நகரில் கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கோயில் ஊழியர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அந்நிலம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.