சபரிமலை: சபரிமலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் தேவசம்போர்டுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பம்பையில் ஒரே ஒரு ஓட்டல் மட்டுமே உள்ளதால் பக்தர்களும் சிரமப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.சபரிமலை மண்டல மகரவிளக்கு காலத்தில் ஓட்டல்கள், கழிவறைகள், பூஜை பொருட்கள் விற்பனை, அப்பம், அரவணை தயாரிக்க தேவையான பொருட்கள் வழங்குதல், புஷ்பாபிஷேகம், வெடிவழிபாடு உள்ளிட்ட 260 பிரிவுகளுக்கு தேவசம் போர்டு ஏலம் விடும்.
இதன் மூலம் 150 கோடி ரூபாய் வரை போர்டுக்கு வருமானம் கிடைக்கும்.ஆனால் இந்த ஆண்டு நேற்று வரை 40 இனங்களுக்கு மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாளிகைப்புறம் ஓட்டல் ரூ.1.85 கோடிக்கும், மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள ஓட்டல் ரூ.1.71 கோடிக்கும் ஏலம் போனது. ஆனால் போலீஸ் குவிப்பு, போராட்ட அறிவிப்பு போன்ற வற்றால் இந்த இரண்டு குத்தகைதாரர்களும் விலகி கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனர். மாகுண்டா பக்தர்கள் தங்கும் விடுதி அருகே உள்ள 10-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஒன்று மட்டுமே ஏலம் போய் உள்ளது.ரூ.1.60 கோடிக்கு புஷ்பாபிஷேகம் குத்தகை எடுத்தவரும் அதில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.
இந்து அமைப்புகள் வழிபாடு புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளதால் வழிபாடுகள் குறையும் எனக்கருதி வழிபாடு பொருட்களின் குத்தகையை எவரும் எடுக்கவில்லை. நிலக்கல்லில் எப்படி கடைகள் அமைக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. மழையில் உருக்குலைந்த பம்பையில் ஒரே ஒரு ஓட்டல்தான் மிஞ்சியுள்ளது. இங்கும் குடிநீர் இணைப்பு வழங்க முடியவில்லை. அட்டதோட்டில் இருந்து வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனால் இங்கு அன்னதானம் கேள்விக்குறியாகியுள்ளது. கழிவறை பணிகள் துவங்கவில்லை.விழா தொடங்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் எந்த உருப்படியான நடவடிக்கைகளும் இல்லை. அதற்கேற்ப தயார் நிலையில் பக்தர்கள் வர வேண்டும்.