கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் மூன்றாம் நாள் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றுத்துடன் கடந்த முதல் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த ஏழாம் தேதி துவங்கியது. பின்னர், 21 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி - கோவை மெயின்ரோடு வழியாக சிவலோகநாதர் கோவில் வளாக "அக்னி மூலையில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் தேரோட்டத்தை, கோவை மேயர் வேலுச்சாமி, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியர், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். அங்கிருந்து புறப்பட்ட தேர் தேரோடும் வீதி வழியாக கிருஷ்ணசாமிபுரம் வீதியில் "வாயு மூலைக்கு பக்தர்கள் இழுத்து சென்று இரவு 8.45 மணிக்கு நிலை நிறுத்தினர். மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின் தேர் கோவில் அடிவாரத்தை இரவு 10.00 மணிக்கு வந்தடைந்தது. நேற்று மாலை 6.00 மணிக்கு பரிவேட்டை தீர்த்தவாரி நடந்தது. இன்று காலை 9.00 மணிக்கு சுவாமி தரிசனம், இரவு 9.00 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது. நாளை இரவு 7.00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.