பதிவு செய்த நாள்
07
நவ
2018
01:11
நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே, நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும், குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான அரிவாள் பாழி மற்றும் அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழியும் அமைந்துள்ளது, மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட, ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி உற்சவ திருவிழாவின் போது, ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலும், அதன் பழம் பெருமை வாய்ந்த மலையும், தற்போது, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. தூய்மை என்ன விலை எனக்கேட்கும் அவலநிலை உள்ளது. இங்கு வரும் பக்தர்களும், சுற்றுச்சூழலை முடிந்தவரை நாசம் செய்கின்றனர். அறநிலையத்துறையும் அவற்றை கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவும், மெத்தனப்போக்கிலும் இருந்து வருவது, ஆன்மிக அன்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இடிந்த கோபுரங்கள், சிதைந்த சிற்பங்கள், விரிசல் விழுந்த சுவர்கள், இடிந்த கல் மன்டபங்கள், மூலவர் இல்லா நடு மண்டபம் (யாதவர் மண்டபம்). மேலும், ஊற்றுகளான அரிவாள் பாழி மற்றும் அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழி, தற்போது, பிளாஸ்டிக் குப்பையால் நிரம்பி, சாக்கடை போல் உருமாறி உள்ளது. மெல்ல அழிந்து வரும், வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்கவும், புனரமைக்கவும், மீண்டும் கும்பாபி ?ஷகம் நடத்தவும், அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.