கந்தசஷ்டி விரத நாட்களில் (நவ. 8 - 13) தினமும் காலை, மாலையில் படித்தால் நலம் சேரும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2018 06:11
* செந்தில்நகர் வாழும் சேவகனே! சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே! குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! பழநி தண்டாயுதபாணியே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில்வாகனனே! சேவல்கொடி ஏந்தியவனே! உன் சன்னதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே! சிவசுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக்குமரனே! சுவாமிநாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றி தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகனே! வள்ளி மணவாளனே! பக்தர்கள் உள்ளத்தில் வாழ்பவனே! காங்கேயனே! கண்கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழ் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
பல்லக்கில் பவனி வரும் புத்தாடை: நரகாசுரன் இறந்த நாளான தீபாவளிஅன்று மக்கள் புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர். திருச்செந்துார் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படும். அன்று அதிகாலையில் இக்கோயிலிலுள்ள பரிவார தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு செய்யப்பட்ட பின்னர் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்து சாத்துவர். முருகப்பெருமான் தெய்வானையின் கரம் பிடிக்க காரணமாக இருந்த தலம் திருச்செந்துார் என்பதால், மாமனாரான இந்திரன் தனது மருமகன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கின்றனர்.