பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க அவன், மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்கள் மறுபிறவியில் அசுரர்களாக பிறந்து இறைவனால் தண்டிக்கப்படுவர். தட்சன் மறுபிறப்பில் பத்மாசுரன் என்னும் அசுரனாக பிறந்தான். அவனது சகோதரர்கள் அவனைப் போலவே கஜமுகாசுரன், சிங்கமுகன், பானு கோபனும் அதர்ம வழியில் வாழ்ந்தனர். இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிடவே, அவை குழந்தைகளாக மாறின. அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலுாட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்த பார்வதி, குழந்தைக்கு கந்தன் என பெயரிட்டாள். கந்தன் அழகானவன் என்பதால் முருகன் என்று அழைக்கப்பட்டார். முருகன் நவவீரர்கள் என்னும் ஒன்பது வீரர்களுடன் இணைந்து போருக்கு தயாரானார். முதலில் பத்மாசுரனின் தம்பியரை அழித்தார்.
மாயையில் வல்ல பத்மாசுரன் மாமரமாக மாறி நின்றான். வேலினால் மரத்தை இருகூறாகக் பிளந்து, ஒரு பகுதியை சேவலாக்கி கொடியாகவும், மறு பகுதியை மயிலாக்கி வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். இதனடிப்படையில் சூரசம்ஹார முடிவில் சேவலை பறக்க விடுவதோடு, சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டி வைப்பர். போரில் மாமரமாக மாறிய சூரனை வேலை ஏவி அழித்ததை நினைவுபடுத்தவே மாவிலை கட்டப்படுகிறது. முருகன் ஆறுமுகம் கொண்டவராக அவதரித்தார். திதிகளில் ஆறாவதுநாள் சஷ்டி. இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் மழலை பாக்கியம் உண்டாகும்.