பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
சென்னிமலை: கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேறிய, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கோலாகலமாக நேற்று (நவம்., 8ல்) தொடங்கியது.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1320 படிக்கட்டுகள் வழியாக, முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு யாக சாலையில் விநயாகர் வழிபாடு. யாக பூஜை, ஹோமங்கள் பூர்ணாஹூதி நடந்தது. அதை தொடர்ந்து, 108 வகையான திரவியங்களுடன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விரதம் இருக்கும் பக்தர்கள், கைகளில் காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி விழா, வரும், 13ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை, 9:30 மணி முதல், 12:00 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கும். பக்தர்களின் வசதிக்காக, அடிவாரத் தில் இருந்து, மலை கோவிலுக்கு, பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும், 13ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக்கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்தி அடிவாரத்துக்கு அழைத்து வரப்படும். அங்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கும்.
அதைத்தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு மேல், நான்கு ராஜா வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும். 14ல் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடக்கும்.