சபரிமலை:கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறப்பார். விபூதி அபிஷேகத்தில் ஜெபமாலையுடன் இருக்கும் மூலவரிடம், பக்தர்கள் வருவது குறித்து மேல்சாந்தி தெரிவிப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் ஏதுமிருக்காது. நாளை அதிகாலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். நடை திறந்திருக்கும் அனைத்து நாட் களிலும் சகஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்படும். மேலும், தினமும் சந்தன அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, லட்சார்ச்சனையும் இருக்கும். மாசி மாத பூஜைகள் முடிந்து, வரும் 18ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.