பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
சென்னை: கோவில் நிகழ்ச்சிகளை, நேரடி ஒளிபரப்பு செய்யும், டிவி நிறுவனங்கள், கோவிலுக்கு செலுத்த வேண்டிய கட்டணம், உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் மற்றும் இதர நிகழ்ச்சிகளை, டிவி நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்பு செய்ய, நாள் ஒன்றுக்கு, 25 ஆயிரம் ரூபாய் கட்டணமும், 25 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு தொகையும், 2003ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
கட்டணம், நாள் ஒன்றுக்கு என்று கணக்கிடப்படுவதால், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான படப் பதிவுக்கு தேவையான, கால நேரத்திற்கு முன்னும், பின்னும், டிவி நிறுவனத்தினர், அதிகப்படியான நேரத்தை கோவில்களில் செலவிடுகின்றனர். இதனால், பக்தர்களுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும், சிரமங்கள் ஏற்படுகின்றன.
எனவே, கோவில் நிர்வாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளையும், பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தவிர்க்க, தற்போதுள்ள கட்டண முறையை மாற்ற வேண்டும். ஒரு மணி நேரத்திற்கான கட்டணம், 20 ஆயிரம் ரூபாய்; காப்பீட்டு தொகை, 20 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்து உத்தரவிடும்படி, அறநிலைய துறை ஆணையர், அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்று, கோவில் நிகழ்ச்சிகளை, நேரடி ஒளிபரப்பு செய்ய, ஒரு மணி நேரத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் கட்டணம், காப்பீட்டு தொகை, 20 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஹிந்து சமய அறநிலைய துறை கூடுதல் தலைமை செயலர், அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.