ராமேஸ்வரத்தில் குவியுது கழிவுத் துணிகள்: நாறுது புனித அக்னி தீர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2018 12:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் குவிந்துள்ள கழிவு துணிகளை அகற்றாததால் தீர்த்தம் துர்நாற்றம் வீசுகிறது.
ஜோதிர்லிங்க தலங்கள் 12ல் தீர்த்த தலமாக விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் வட, தென் மாநிலங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடுவார்கள்.
ஆனால், சில தனியார் லாட்ஜ், வீடுகளில் செப்டிக் டாங்க் இல்லாததால் இங்கிருந்து வெளி யேறும் கழிவு நீர் நேரடியாக அக்னி தீர்த்த கடலில் கலந்து துர்நாற்றம் வீசியது. மேலும் நீராடிய பிறகு பக்தர்கள் வீசும் கழிவுத் துணிகள் அக்னி தீர்த்த கரையில் ஒதுங்குவதால் மாசடைகிறது. நேற்று (நவம்., 9ல்) கழிவுத் துணிகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
ஆனால், நகராட்சி டிரைவர் தற்கொலை விவகாரத்தில் துப்புரவு ஆய்வாளர் அய்யப்பன் நீண்ட விடுப்பில் சென்றதால் சுகாதாரப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் நவ.,6 முதல் நவ.,9 வரை குப்பை அகற்ற போதுமான ஊழியர்கள் பணிக்கு வராததால் கடந்த 4 நாட்களாக அக்னி தீர்த்த கரையில் கழிவு துணியை அகற்றாமல் குவிந்து கிடந்தது.
இதனால் அக்னி கடற்கரையில் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடியும், சிலர் நீராடாமல் திரும்பிச் சென்றனர். மேலும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், தேவர் சிலை, வேர்க்கோடு, மாந்தோப்பு பகுதியில் குப்பையால் நகர் முழுவதும் நாறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே புனித நகரில் சுகாதாரம் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.