பதிவு செய்த நாள்
13
நவ
2018
02:11
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 31ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மாவிளக்கு பூஜை நாளை (நவம்., 14ல்) நடக்கிறது. 15ம் தேதி அதிகாலை, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து பொங்கல் வைபவம் நடக்கும்.
அன்று மாலையே, தேர் நிலை சேரும். அன்றிரவு, 7:00 மணிக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி சுமந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவர். இதையடுத்து, 14க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள், கோவிலுக்கு காவடி சுமந்து வருவர்.