பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
சென்னிமலை: கந்தர் சஷ்டி விழா நிறைவு நாளான, நேற்று (நவம்., 14ல்)சென்னிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சென்னிமலை, முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம், (நவம்., 13ல்)முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி, சூரனை வதம் செய்ய புறப்பாடு நடந்தது. மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய நான்கு ராஜ வீதிகள் வழியாக முருகப்பெருமான், சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று (நவம்., 14ல்) காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாண வைபோகம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடந்தது. அப்போது முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது. தலைமை குருக்கள் ராமநாத சிவம், தெய்வானைக்கு மங்கள நாண் அணிவித்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார். கல்யாணத்தில் பங்கேற்றவர்கள், மொய் எழுதினர். விழாவில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, சுப்ரமணியர் கோவிலில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு உட்பிரகார மண்டபத்தில், உற்சவர் சுப்ரமணியர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர், மாலை மாற்றும் வைபவம் நடந்தது. மணக்கோலத்தில், சுப்ரமணியர், வள்ளி-தெய்வானை சமேதராய், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* கோபி பச்சமலை முருகன் கோவிலில், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ திருவிழா, கடந்த, 8ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அதன்பின், சண்முகர் அர்ச்சனை, தங்கமயில் ரதம் புறப்பாடு, அபி ?ஷக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக, சூரசம்ஹாரம், பன்னீர் அபிஷேகம் நேற்று முன்தினம் (நவம்., 13ல்) நடந்தது. இதையடுத்துல, திருக்கல்யாண உற்சவம் நேற்று (நவம்., 14ல்)நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோவில், கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர், கருங்கல்பாளையம் சுப்ரமணியர் கோவில், காசிபாளையம் மலைக் கோவில். என, மாநகரில் பத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடந்து முடிந்தது. சூரனை வதம் செய்த பின், சினம் தணிந்த முருகனுக்கு நேற்று (நவம்., 14ல்)திருக்கல்யாணம் நடந்தது. திண்டல் கோவிலில், விழா மண்டபத்தில் எழுந்தருளிய, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கும், காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள், தேவியருக்கு மாலை சூட்டினர். பின்னர், திருமண விழா விருந்து நடந்தது. பக்தர்கள், திருமண மொய் எழுதி விட்டு, பின் தாம்பூலம் பெற்று சென்றனர்.