பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 8ல் கந்தசஷ்டி, லட்சார்ச்சனை பெருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், மின்விளக்குகளால், சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூரன் அமர்ந்திருத்த தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குமாரசாமிப்பேட்டை கோவிலில் இருந்து, நான்கு ரோடு வழியாக, தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான மைதானத்துக்கு, தேர் வந்தது. தொடர்ந்து, யானை, சிங்கம், வடிவத்தில் வந்த சூரபத்மனை, சுப்பிரமணிய சுவாமி வதம் செய்தார். நிறைவு நாளான நேற்று (நவம்., 14ல்)காலை, 10:00 மணிக்கு, குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பூர்த்தி ஹோமம், மதியம் இடும்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதில், வள்ளி, தெய்வானையுடன், சுவாமி அருள்பாலித்தார்.
* தர்மபுரி மாவட்டம், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா, நேற்று முன்தினம் (நவம்., 13ல்) துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று (நவம்., 14ல்) காலை, 10:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, ஹோம பூஜைகள் நடந்தன. பின், சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகுவிமர்சையாக நடந்தது.