பதிவு செய்த நாள்
18
நவ
2018
12:11
ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். நேற்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சேதுக்கரை, தேவிபட்டினம் கடலில் புனித நீராடிய பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு ஆவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோயில் தலைமை குருசாமி மோகன்சாமி கூறுகையில், வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை 1 முதல் 48 நாட்களும் இரவு பஜனையும், ஞாயிற்றுக்கிழமைகளில் உலக நன்மைக்கான கூட்டுப் பிரார்த்தனையும், தினமும் இரவில் அன்னதானமும் நடக்கிறது, என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயில், பாரதிநகர் ஐயப்பன் கோயில், சுந்தரராஜப்பெருமாள் கோயில், அவரவர் குலதெய்வக் கோயில், இஷ்ட தெய்வ கோயில்களில் மாலை அணிந்து கொண்டனர்.
ராமேஸ்வரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசிக்க ராமேஸ்வரத்தில் 5,000 பக்தர்கள் மாலை அணிந்து 45 முதல் 60 நாட்கள் வரை விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
அதன்படி நேற்று கார்த்திகை 1ல் ராமேஸ்வரம் கோயில் விநாயகர், காசிவிஸ்வநாதர் சன்னதி முன்பு கோயில் குருக்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
அய்யப்ப பக்தர் குருநாதர் தில்லைபாக்கியம் கூறுகையில், இந்தாண்டு ராமேஸ்வரத்தில் இருந்து 5000 முதல் 7000 பக்தர்கள் இருமுடி கட்டி செல்வோம். பெண்களுக்கு கண்டிப்பாக இருமுடி கட்டமாட்டோம், என்றார்.