1932ல், புத்தாண்டு நிகழ்ச்சியாக சென்னை சங்கீத வித்வத்சபையில் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அவருக்கு உடல்நலம் இல்லாமல் போனதால் வேறு ஒருவரை ஏற்பாடு செய்யும்படி டிசம்பர்31 அன்று தகவல் அனுப்பினார். சபா நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். புதிய இளம்பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமியை அழைப்பது என்று முடிவெடுத்தனர். புத்தாண்டின் மாலைநேரத்தில் ரசிகர்கள் அரியக்குடியின் இசையைக் கேட்க ஒன்றுகூடினர். ஆனால், மேடையில் இளம்வயதுடைய எம்.எஸ்.சுப்புலட்சுமி சபையை வணங்கி அமர்ந்தார். ஏமாற்றமடைந்த ரசிகர்கள், எம்.எஸ்.,ஸின் கந்தர்வக் குரலைக் கேட்டதும் பலே! ரொம்ப பிரமாதம்!! என கரகோஷம் எழுப்பினர். இந்த நிகழ்ச்சி அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.