அலங்காநல்லுார், அழகர்மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவையொட்டி கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. பின் ராஜகோபுரம் முன்பாக முருகபெருமான் எழுந்தருளினார். அப்போது சொக்கப்பனை கொளுத்தபட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தனர்.
செல்லம்பட்டி: பெரியநாயகி கைலாசநாதர் கோயிலில் சார்பில் திடியன் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றினர். மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமர் கோயிலில் பூஜை நடந்தது. தொடர்ந்து மலையில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
உசிலம்பட்டி: திருமுருகன் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் நகர்வலம் வந்த பின் கோயில் அருகில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர். புத்தூர் குமரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.