பதிவு செய்த நாள்
24
நவ
2018
11:11
தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலில், திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் நான்காவது படைவீடான, தஞ்சை, சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்த பெற்றது. தந்தையாகிய சிவபெருமானுக்கு, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால், சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலம். இங்கு, கடந்த 15ம் தேதி, திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளினார். பின்னர், அன்று முதல், கடந்த, 22ம் தேதி வரை, சுவாமி வீதிவுலா தினமும் காலை, மாலை நேரங்களில் நடந்தது.
முக்கிய விழாவான நேற்று, திருக்கார்த்திகையை முன்னிட்டு, காலை, 8:30 மணிக்கு, சிறப்பலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன், சண்முகர், திருத்தேரில் எழுந்தருளினார். மங்களவாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க, ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இரவு, 9:00 மணிக்கு, தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடந்தது. இன்று காலை, படிச்சட்டத்தில் வீதியுலாவும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இரவு, 8:00 மணியளவில் கொடியிறக்கம் நடைபெறுகிறது. நாளை நவ., 25ம் தேதி காலை, 8:00 மணியளவில், திருக்கார்த்திகை திருவிழா முடிந்து, சுவாமி மலைக்கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.
பழநி: சபரிமலை சீசன் காரணமாக, பழநி முருகன் மலைக்கோவிலுக்கு, பக்தர்கள், சுற்றுலா பயணியர், அதிகமாக வருகின்றனர். நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணி முதல் குவிந்த பக்தர்கள், ‛ரோப்கார், வின்ச்’ மூலம் மலைக்கு செல்வதற்கு, இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோவிலில் பொதுதரிசனம் வழியில், மூன்று மணிநேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், பால்குடங்கள், காவடிகள் எடுத்து, கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வப்போது பெய்த மழையால், ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.