பழநி: சூரியன் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை. மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை சூரியன் அள்ளித்தருகிறது. இதனால் தான் காலை எழுந்து குளித்தவுடன் சூரியநமஸ்காரம் செய்யவேண்டும் என ஆன்மிக பெரியவர்கள் அடிக்கடி வலியுறுத்து கின்றனர்.
இயற்கை வடிவமைப்பின் முதல் கிரகமான சூரியனே பிரதானம், புராணத்தின்படி காசிபர், அதிதி தம்பதியின் மகனாக பிறந்த விஸ்வான் என்பவரே சூரியன் எனவும், செம்பொன் நிறமேனியுடன் காலச்சக்கரங்கள் சூழல ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணிப்பவன் எனவும், காலத்தின் கடவுளே சூரியன்தான் எனவும் வேதம் கூறுகிறது. இத்தனை சிறப்பு மிக்க சூரியபகவானுக்கு ஒருசில இடங்களில் மட்டுமே தனிசன்னதி அமைந்துள்ளது.
முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான, பழநி திருவாவினன்குடி கோயிலில் லட்சுமி, காமதேனுவுடன் சூரியனும் இருந்து அருள்பாலிக்கிறார்.
ஆனால் பழநி ஊரக்கோயில், யானைக்கோயில் என அழைக்கப்படும் கிழக்குரத வீதியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் சூரியபகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இந்தபல நூறாண்டு பழமை வாய்ந்த பெரியநாயகியம்மன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
இக்கோயிலின் கிழக்கு உட்பிராகாரத்தில் நவக்கிரகங்களில் முதன்மை கிரகமான சூரிய பகவான் தனிசன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.இங்கு ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சிறப்பு பூஜை, அபிஷேக வழிபாடுகள் நடக்கிறது. பழநி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சூரியபகவானின் தோஷம் நீங்க வரும் பக்தர்கள், தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
அப்புறம் என்னங்க... நீங்களும் ஒரு ஞாயிறு தினத்தில் ஞாயிறு பகவானை அதாங்க.. சூரியபகவானை வணங்கி சுகபெறலாம் வந்துதான் பாருங்களேன்.