பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
சேலம்: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள, சிவன், முருகன் கோவில்களில், நேற்று (நவம்., 23ல்) சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம், இரண்டாவது அக்ரஹாரம், காசி விஸ்வநாதர்; லைன்மேடு அம்பலவாணர், உத்தமசோழபுரம் கைலாசநாதர்; அரியானூர், 1,008 சிவாலயம் உள்ளிட்ட சிவன் கோவில்கள், ஊத்துமலை முருகன், கந்தாஸ்ரமம், செவ்வாய்ப்பேட்டை சித்திரைச்சாவடி உள்ளிட்ட முருகன் கோவில்களில், நேற்று (நவம்., 23ல்) காலை, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலையில், தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், வீடுகள், பொது இடங்களில் தீபமேற்றி, பட்டாசு வெடித்து, மக்கள் கார்த்திகை தீப நாளை கொண்டாடினர்.
* ஓமலூர், செவ்வாய் சந்தை அருகேவுள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில், கொடி மரத்தில், நேற்றிரவு, தீபம் ஏற்றப்பட்டது. உற்சவர், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடைவீதி, அண்ணாமலையார் கோவிலில், லிங்க வடிவில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோட்டை வசந்தீஸ்வரன், அக்ரஹாரம் வைத்தீஸ்வரன், பண்ணப்பட்டி குபேரலிங்கேஸ்வரர் கோவில்களில், தீபமேற்றப்பட்டது.
* தம்மம்பட்டி, திருமண்கரடு மலையிலுள்ள, பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில், 12 அடி உயர பீடத்தில், மூன்றடி உயரம், 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு கொப்பரையை, நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்தனர். நேற்று (நவம்., 23ல்), 370 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கொப்பரையில், 200 லிட்டர் நெய், எண்ணெய் ஊற்றப்பட்டு, மஹா தீபமேற்றப்பட்டது. அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களின் வளாகத்தில், ஏராளமான பக்தர்கள், தீபமேற்றி வழிபட்டனர்.