சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.நவ. 25 ம் தேதி மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. நவ. 26ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. சுவாமிக்கு16 வகையான திரவியங்களை கொண்டு 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக நவ.25 ம் தேதி இக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவமூர்த்தி சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. குமார குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வைத்தனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் மேலத்திருத்தளிநாதர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது.நேற்று இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகத்தை அடுத்து நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு கலசங்களுக்கு யாகபூஜை நடந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாட்டினை கோயில் பிரதோஷ குழுவினர் செய்தனர்.