சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவு காரணமாக அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள், பிரசாதமாக அப்பம் மற்றும் அரவணை வாங்கி செல்வர். போலீசாரின் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. வரும் பக்தர்களும் சன்னிதானத்தில் இருந்து விரைந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இதனால் பிரசாத விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. தற்போது இரண்டு லட்சம் பாக்கெட் அப்பம் "ஸ்டாக் உள்ளது. இதை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டாக் செய்யப்பட்ட அப்பம் விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்க, அப்பம் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பம் தயாரிப்பில் உள்ள 60 ஒப்பந்த தொழிலாளர்களும் தங்களை ஊருக்கு செல்ல அனுமதிக்குமாறு நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். 26 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளதால் தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இங்கும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிமானால் மட்டுமே தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும்.