பதிவு செய்த நாள்
28
நவ
2018
12:11
மேட்டுப்பாளையம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், உண்டியலில் ஒரு ரூபாய் மட்டும் காணிக்கை செலுத்தும்படி, மேட்டுப்பாளையம் அனைத்து ஐயப்ப பக்தர்கள் குழுவினர் பிரசாரம் செய்கின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டியும், கட்டாமலும் கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தாண்டு மண்டல, மகர ஜோதி பூஜைக்காக, கடந்த, 16ல் கோவில் நடை திறக்கப்பட்டது.
கார்த்திகை முதல் தேதியன்று, பக்தர்கள் துளசி மாலை அணிந்து, விரதம் துவக்கியுள் ளனர்.மேட்டுப்பாளையம் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களிடம், அனைத்து ஐயப்ப பக்தர்கள் குழுவினர் நூதன பிரசாரம் செய்து வருகின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒரு ரூபாய் மட்டும் சன்னிதானத்தில் காணிக்கையாக செலுத்துங்கள். இருமுடியில் உள்ள காணிக்கைகளை, சபரிமலை உண்டியலில் செலுத்தாமல், தங்களது பகுதியில் உள்ள நலிவடைந்த கோவில்களுக்கு அளிக்கவும். சன்னிதானத்தில் விற்கப்படும் அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை வாங்க வேண்டாம் என, பிரசாரம் செய்கின்றனர்.