பதிவு செய்த நாள்
28
நவ
2018
12:11
அன்னூர்: இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில், ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்கும் மகா யாகம், கோ மாதா பூஜை, கஜ பூஜை அடுத்த மாதம் நடக்க உள்ளது. கிராமம்தோறும், ரத யாத்திரை மூலம் மகா யாகத்துக்கு செங்கல், பசு நெய் சேகரிக்கும் பணி, 10 நாட்களாக நடக்கிறது.
கோ மாதா ரத யாத்திரை, அன்னூர் பாத விநாயகர் கோவிலில், மாவட்ட செயலாளர் குட்டி தலைமையில் நேற்று (நவம்., 27ல்)துவங்கியது.
மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார் பேசுகையில், இந்து கலாசாரம், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் பணியை சிலர் செய்கின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். உலகில் தொன்மையானது இந்து கலாசாரம், என்றார்.அல்லிக்குளம், செல்லனூர், ராம்நகர் உட்பட, 25 கிராமங்களில் நேற்று ரத யாத்திரை சென்று செங்கல், மற்றும் பசு நெய் சேகரித்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஒன்றிய தலைவர்கள் கார்த்தி, மாரப்பன் நகர செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ரத யாத்திரை, இன்று (நவம்., 28ல்) அன்னூரின் தெற்கு பகுதியில் செல்கிறது.
வரவேற்பு:சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மகாலட்சுமி ரத யாத்திரை நடந்தது. செஞ் சேரி பிரிவில் ஒன்றிய தலைவர் சந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நல்லூத்துப் பாளையம், வதம்பச்சேரி, காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, செஞ் சேரி பிரிவு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பாலதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.